இலங்கையிலிருந்த தமிழ் மனைவியை வைத்து த .வெ. க நிர்வாகி செய்து வந்த மோசமான செயல் அம்பலம்
இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் உட்பட 4 பேரை இந்திய புலனாய்வு அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக இந்திய மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இலங்கையில் மனைவி
இதையடுத்து நேற்று காலை 6.00 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுகன்(27) என்பவர் வீட்டுக்கு 16 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்திய அவர்கள், சுகன், அவரது சகோதரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் மூளையாகவும், பின்புலமாகவும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன்(29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ்(30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பூபாலன் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதை பூபாலன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கைது செய்யப் பட்ட 4 பேரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து படகையும், அதற்கு காரைக்காலில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிவேக இயந்திரத்தையும் வாங்கிச் சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நபரை சுற்றி வளைத்து விசாரித்துள்ளனர்.
கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியை விட்டு நீக்கி தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.