காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ; கடற்படை முகாம் குறித்து CID தகவல்
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையின் ‘கன்சைட்’ (Gunsite) முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த முகாமின் சுவரில் எழுதப்பட்டிருந்த முகவரி, கடத்தப்பட்டவர்களில் ஒருவரான சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின்போது, குறித்த கடற்படை முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சில வழக்குகள், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் கப்பம் பெறும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரால் மொத்தம் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தகவல் இருந்ததாகவும், தெஹிவளையில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.