கபில சந்திரசேன மர்ம மரண விசாரணையில் புதிய சட்ட சிக்கல்
கபில சந்திரசேன அவர்களின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரை சாட்சியத்திற்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கபில சந்திரசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் சட்டத்தரணிகளாக முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தேஜித கோரலகே, நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வ அழைப்பாணை விடுக்கப்படாத போதிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அமைவாக நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இருவரும் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 370(5) பிரிவின் கீழ் குறித்த இரண்டு சட்டத்தரணிகளையும் சாட்சியத்திற்கு அழைப்பது அவசியமா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என கோரினார்.
மேலும், சான்றியல் கட்டளைச் சட்டத்தின் 126ஆவது பிரிவு மற்றும் உயர் நீதிமன்ற விதிகளின் அடிப்படையில், ஒரு சட்டத்தரணிக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையிலான ஆலோசனைகள் இரகசியமானவை என்பதால், அவற்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை கவனிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், மரணமடைந்த கபில சந்திரசேன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இடையே முக்கிய உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், கபில சந்திரசேனவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், சிலர் அரவிந்த டி சில்வா மாவத்தையில் உள்ள வீட்டிற்கு சென்று பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணியின் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை கண்டறிவதற்காகவே குறித்த சட்டத்தரணிகளை சாட்சியத்திற்கு அழைக்க முயற்சிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருதரப்பினரின் காரணிகளையும் பரிசீலித்த நீதவான், குறித்த இரண்டு சட்டத்தரணிகளையும் சாட்சியத்திற்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவு ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிக்கப்படும் என அறிவித்தார்.