சுற்றுலா வருமானம் உயர்த்த புதிய கொள்கைகள் ; ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் புதிய சவால்
இலங்கையின் சுற்றுலாத்துறை 2025 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இருப்பினும், இந்த வெற்றியை வெறும் வருகை எண்ணிக்கையை வைத்து மட்டும் அளவிடாமல், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய சந்தை பகுப்பாய்வு அறிக்கையின்படி, நாட்டின் தற்போதைய சுற்றுலா வளர்ச்சி அண்டை நாடுகளின் வருகையிலேயே அதிகளவில் தங்கியுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 531,511 இந்தியப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மற்ற நாடுகளை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும்.
இவர்களில் 59 சதவீதமானோர் பொழுதுபோக்கிற்காகவும், 11 சதவீதமானோர் தொழில்சார் பயணங்களுக்காகவும் வருகை தந்துள்ளனர். எனினும், இவர்களின் தினசரி சராசரிச் செலவு சுமார் 176.49 டொலர்களாக (சுமார் 56,100 ரூபா) மட்டுமே காணப்படுகின்றது.
இதேவேளை, பங்களாதேஷ் நாடும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அங்கிருந்து 59,563 பயணிகள் வருகை தந்துள்ள போதிலும், அவர்களின் தினசரி சராசரிச் செலவு மிகக் குறைந்த அளவில், அதாவது 129.28 டொலர்களாகவே பதிவாகியுள்ளது.
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் 'அதிக வருமானம் ஈட்டித்தரும் சந்தையாக' ஐரோப்பிய நாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, பிரித்தானியா மொத்த வருகை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது (212,277 பயணிகள்). ஒரு பிரித்தானிய சுற்றுலாப் பயணி நாளொன்றுக்கு சராசரியாக 263.38 டொலர்களைச் செலவிடுகின்றார்.

இது ஆசிய நாடுகளின் செலவினங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து கணிசமான பயணிகள் வருகை தந்தாலும் (முறையே 186,580 மற்றும் 132,035), தரவு சேகரிப்பில் பாரிய சவால்கள் நிலவுவதாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, சீனப் பயணிகளில் 48 சதவீதமானோரும், இந்தியப் பயணிகளில் 32.4 சதவீதமானோரும் தமது பயணத் தகவல்களைச் சரியாக வழங்கவில்லை. மேலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் 52 சதவீதமானோர் தமது பயணத்திற்கான காரணத்தை விளக்கவில்லை.
இது எதிர்கால சந்தைப்படுத்தல் திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது. எனவே நிலையான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த, இலங்கை ஒரு 'இரட்டை சந்தை மூலோபாயத்தை' கையாள வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதாவது, அண்டை நாடுகளின் அதிகப்படியான வருகையைப் பேணிக்கொண்டே, அதிக வருமானம் தரக்கூடிய மேற்கத்திய நாடுகளின் சந்தைகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது முக்கியப் பரிந்துரையாகும்.