பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட புதிய நடவடிக்கை
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா குழு) ஏற்கனவே வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோபா குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் செயன்முறையை மேலும் வினைத்திறனாக்குதல், விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், உள்ளக மற்றும் வெளிப்புற பரீட்சகர்களைப் பணியில் ஈடுபடுத்துதல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதி, தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அச்சிடும் வசதிகளை மேம்படுத்துதல், பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் கட்டணங்களைத் திருத்தியமைத்தல் போன்ற விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிடும் நோக்கில் புதிய OMR மற்றும் OCR தொழில்நுட்ப முறைமைகளை அறிமுகப்படுத்துதல், தனியான மதிப்பீட்டு மையமொன்றை நிறுவுதல் மற்றும் நிறுவன ரீதியான பரீட்சைகளை வினைத்திறனுடன் நடத்துதல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர்.
மேலும், பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்துதல், ஆசிரியர்களின் பாட அறிவு மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல், புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டது.
இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, முன்னைய பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.