மெட்டாவின் புதிய அதிரடி மாற்றங்கள் ; இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர புதிய அம்சங்கள்
இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வட்ஸ்அப் (WhatsApp) செயலிகளில் புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் புகைப்படங்களைப் பகிரும் செயலியாக அறிமுகமான இன்ஸ்டாகிராம், பின்னர் வீடியோ பதிவேற்ற வசதியையும் அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் அறிமுகமான “ரீல்ஸ்” அம்சம் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பயனர்களை மேலும் கவரும் நோக்கில், அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் இன்ஸ்டாகிராம், தற்போது எடிட் ஸ்டோரி (”Edit Story”) எனப்படும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது.
இந்த புதிய வசதியின் மூலம், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை பதிவிட்ட பின்னரும் அவற்றை நேரடியாக திருத்த முடியும். தற்போது, எழுத்துப் பிழை, தவறான டேக் அல்லது ஸ்டிக்கர் இடம்பெற்றால், முழு ஸ்டோரியையும் நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.
ஆனால் புதிய “Edit Story” வசதி அறிமுகமானால், பதிவிட்ட பின்னரும் ஸ்டோரிகளை எளிதில் திருத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது சில ஐபோன் பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, வாட்ஸ்அப்பிலும் இன்ஸ்டாகிராமின் “Close Friends” வசதியைப் போன்ற புதிய தனியுரிமை அம்சம் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் உள்ளிட்ட தனித்தனி பட்டியல்களை உருவாக்கி, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பகிரும் வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய தனியுரிமை அம்சமும் தற்போது பீட்டா பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.