இந்தியா – இலங்கை படகு சேவைக்கு புதிய வசதி ; தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-Free) விற்பனை நிலையங்களை அமைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வழங்கப்படும் தரமான வசதிகளுக்கு இணையான சேவைகளை நாகப்பட்டினம் பயணிகள் முனையத்திலும் ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியா–இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவை, சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள், வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கான முக்கிய போக்குவரத்து இணைப்பாக உருவெடுத்துள்ளது.
இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தச் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரியில்லா விற்பனை நிலையங்களை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளன.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்நிலையங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அந்நியச் செலாவணி மாற்று (Foreign Exchange) மையங்களையும் முனையத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய அரசின் சுங்க விதிமுறைகளுக்கு இணங்க தகுதியுடைய சர்வதேசப் பயணிகள், இவ்வரியில்லா விற்பனை நிலையங்களில் வரிவிலக்குடன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.