புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது ; சிறிதரன் வலியுறுத்து
புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ், கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வினவினார்.
கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன என்றும் புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமய பாடத்தில் சைவ சமயம் சீராக முன்னெடுக்கப்படவில்லை.
வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் மொழி இலச்சினைகள் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.
இவற்றுக்கான தீர்வுகள் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கொண்டு வரப்படுமா? இலங்கையன் கல்வித்துறையில் கலைத்திட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இப்பொழுது கொண்டு வரப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பான சில விளக்கமூட்டும் கூட்டங்களும் தங்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. ஆனால் புதிய கலைத்திட்டம் மாணவர்களுக்கு சுமையைக் குறைப்பதாகவும், கல்வியில் புதிய புத்தாக்கத் தேடல்களைக் கொண்டு வருவதற்கான வழிமுறையாகவும் இருக்குமென கூறப்படுகின்றது.
தரம் 06 இற்கு 15 கட்டாய பாடங்கள், தெரிவு பாடங்கள் 03 என 18 பாடங்களாயின் நேர அட்டவணை தயாரிப்பதில் உள்ள இடர்பாடுகள், நிலை மாற்றுத் திறன்களில் மாணவன் 2 பாடங்களைத் தெரிவு செய்தல், இவ்வளவு காலமும் தவணைக்கு 265 மணித்தியாலங்களாக இருந்த மாணவனின் கற்றல் நேரம் தற்போதைய புதிய கலைத்திட்ட வரவால் 365 மணித்தியாலங்களாக வர உள்ளது.
இதுவரை காலமும் இருந்ததை விட மாணவனுக்கு 30வீத சுமை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.