வைபவ் சூர்யவன்ஷி மீது எழுந்த புதிய சர்ச்சை
12 வயதிலேயே ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஐபிஎல் அரங்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி உலகையே வியக்க வைத்து வருகிறார்.
எனினும், அவரது அதிரடி ஆட்டம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர் ஒருவர் விசித்திரமான சந்தேகமொன்றை எழுப்பியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணரான நௌமேன் நியாஸ், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து விமர்சித்துள்ளார்.
"18 வயது வீரர்களால் கூட இவ்வாறான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். சூர்யவன்ஷியிடம் பலத்தை விடவும் நுட்பமே அதிகமாகக் காணப்படுகிறது. அவரது இந்த அசாதாரண ஆட்டம் குறித்து ஆராயப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவதைப் போன்று, சூர்யவன்ஷி பயன்படுத்தும் துடுப்பாட்ட மட்டையை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மட்டையினுள் ஏதேனும் செயற்கை நுண்ணறிவு சிப் (AI Chip) பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும், அதன் மூலமே அவர் இவ்வளவு சக்திவாய்ந்த அடிகளை விளாசுகிறார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சூர்யவன்ஷி தனது முதல் ஐபிஎல் போட்டியில் சந்தித்த முதலாவது பந்திலேயே ஆறு ஓட்டத்தை அடித்து அனைவரையும் அதிரவைத்தார்.
அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் அவர் சதம் விளாசியமை கிரிக்கெட் உலகில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் நிபுணரின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், சூர்யவன்ஷியின் ரசிகர்கள் இதனை ஒரு நகைச்சுவையான மற்றும் பொறாமை கலந்த விமர்சனமாகவே பார்த்து வருகின்றனர்.