பெரும் எதிர்பார்ப்பில் விஜய்யின் இறுதி படம் ; வெளியீட்டுக்கு முன் புதிய சர்ச்சை
தளபதி விஜய் நடித்து, ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், இப்படம் மே 7 ஆம் திகதி வெளியாகக்கூடும் எனத் தெரிவித்தார்.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் தினத்தில் வெளியாகவிருந்தஇந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் இணைய கசிவுபோன்ற காரணங்களால் தாமதமாகியது இந்த நிலையில் தற்போது விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மே மாதம் ஜனாநாயகன் திரைப்படம் திரைக்கு வரும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்த திரைப்படத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பாப்பாபட்டி, பகாதேவன்பட்டி மற்றும் பேயம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், படத்தின் இயக்குநர் வினோத் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மறுபுறம், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்குத் தாம் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியம், முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கத் தொடங்கிய பின்னர் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாலேயே பெரிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் விமர்சித்தார்.
அனிருத் இசையமைப்பில் கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த திரைப்படம், பல்வேறு தடைகளைக் கடந்து திரைக்கு வரவுள்ளமை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.