2026 வாக்காளர் பதிவு கணக்கெடுப்பில் புதிய மாற்றங்கள்
இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL)அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு கணக்கெடுப்பு முறையில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று விபரங்களைச் சேகரிக்கும் நடைமுறை இருந்தது.
எனினும், இந்த முறை அதிகாரிகள் அனைத்து வீடுகளுக்கும் செல்லமாட்டார்கள் என்றும், வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் தேவைப்படும் வீடுகளுக்கு மட்டுமே அவர்களது விஜயம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிதாக வாக்காளர் பெயர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்கப்பட வேண்டிய பெயர்களைக் கொண்ட 'அ' மற்றும் 'ஆ' பட்டியல்களில் திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் உள்ள வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்ல உள்ளதுடன், அவ்வாறு விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளில் மட்டுமே கணக்கெடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
இந்தச் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கணக்கெடுப்புப் பணிகளை நேரில் பார்வையிடவும், வாக்காளர் தகுதி குறித்து அதிகாரிகள் வழங்கும் பரிந்துரைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்புப் பணியின் போது ஏதேனும் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டால், அரசியல் பிரதிநிதிகள் அது குறித்து எழுத்துப்பூர்வமாக கணக்கெடுப்பு அதிகாரியிடம் முறைப்பாடளிக்கலாம்.
அதன் நகல் ஒன்றை உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL)அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.