அஸ்வெசும கொடுப்பனவு புதிய பயனாளிகள் ; வெளியான அறிவிப்பு
அஸ்வெசும' நலத்திட்டத்தின் புதிய கட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
புதிய பயனாளிகள் பட்டியல் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும், அதன் மூலம் எவரும் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அஸ்வெசும' பயனாளிகள் குறித்த மீளாய்வு
இதற்கிடையில், 'அஸ்வெசும' பயனாளிகள் குறித்த மீளாய்வு (re-survey) ஒன்று நடத்தப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், இப்பணி இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் 1,773,445 'அஸ்வெசும' பயனாளிகள் இருந்தனர். 2024 ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 1,761,116 ஆக இருந்தது.
2025 ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக அதிகரித்திருந்தாலும், இவ்வருடத்தில் அது 1,251,522 ஆகக் குறைந்துள்ளது. முன்னதாக, 'அஸ்வெசும' நலன்கள் நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வந்தன.
மிக வறியோர், வறியோர், பாதிப்புக்குள்ளாகக்கூடியோர் மற்றும் இடைக்காலப் பிரிவினர். இடைக்காலப் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்தப்பட்டன.
அதேவேளை, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் இவ்வருடம் ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டன. அதற்கிணங்க, மிக வறியோர் மற்றும் வறியோர் ஆகிய பிரிவினருக்கு மட்டுமே அரசாங்கம் 'அஸ்வெசும' கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.