பவர் பேங்க் தீ பிடித்ததால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து போர்த்துக்கலின் லிஸ்பன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த லூஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் , பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பிரான்சின் லியோன் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
லூஃப்தான்சா நிறுவனத்திற்குச் சொந்தமான LH-1790 என்ற எயார்பஸ் வானூர்தி முனிச்சில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, கைமுறைப் பையில் (Hand luggage) வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றி புகையை வெளிப்படுத்தியது.

அவசரமாகத் தரையிறக்க அனுமதி
உடனடியாகச் செயல்பட்ட விமானப் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானி உடனடியாக பிரான்சில் உள்ள லியோன் வானூர்தி நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.
அதன்படி லியோன்-செயின்ட் எக்சுபெரி (Lyon-Saint Exupéry) வானூர்தி நிலையத்தில் வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தேவையான பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு பயணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.