நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ; பொதுமக்களுக்கு திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

எச்சரிக்கை
நேபாளத்தின் தேசிய பேரிடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், புத்தி கண்டகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிசூலி தோபன் பகுதி வரையிலான வெள்ள அபாயம் உள்ள இடங்களில் வசிப்போர் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி, உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் உயிரிழப்புகளும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறை உடைதல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் கருமை நிறத்தில் சேறு கலந்த நீர் பெருக்கெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.