பௌத்த துறவியின் காவி உடையை களைவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை ; ரணில் விக்கிரமசிங்க
வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் காலங்களில் கூட மகா சங்கத்தினருக்குத் துன்புறுத்தல்கள் நேர்ந்தபோதிலும், காவி உடையைக் களையும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இது ஒட்டுமொத்த பௌத்த மக்களையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் விரும்பியிருந்தால் இப் பிரச்சினையைப் நாடாளுமன்றத்தில் விவாதித்து வேறு வழிகளிலும் சுமுகமாகத் தீர்த்திருக்க முடியும்.

சிறை ஆடை
எனவே, மக்கள் பிரதிநிதிகள் ஊடாக இப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீவிரமாக முன்வைக்கவும், அரசியலமைப்பு ரீதியாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க போவதாகவும் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு 7 அமைந்துள்ள தமது அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை சட்டத்தரணிகளை சந்தித்து விசேட கலந்தரையாடலில் ஈடுபட்டார்.
சிறையிலடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டு அவருக்குச் சிறை ஆடை அணிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் கூறுகையில், பௌத்த விதிகளின்படி, பௌத்த துறவி ஒருவரின் காவி உடையைக் களைவதற்கோ அல்லது அவரைத் துறவறத்திலிருந்து நீக்குவதற்கோ உரிய மகா சங்கத்தினருக்கு (மகாநாயக்க தேரர்களுக்கு) மட்டுமே முழுமையான அதிகாரமுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதி அமைச்சானது மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவானது பௌத்த மதத்தையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள மத சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துக்களைத் திட்டமிட்டு மீறியுள்ளது.
இதனை ஒரு சாதாரண நீதிமன்ற வழக்கின் நடைமுறையாக மட்டும் பார்க்க முடியாது. முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றே அன்றைய ஜனாதிபதியால் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் காலங்களில் கூட மகா சங்கத்தினருக்குத் துன்புறுத்தல்கள் நேர்ந்தபோதிலும், காவி உடையைக் களையும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது ஒட்டுமொத்த பௌத்த மக்களையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
அரசாங்கம் விரும்பியிருந்தால் இப் பிரச்சினையைப் நாடாளுமன்றத்தில் விவாதித்து வேறு வழிகளிலும் சுமுகமாகத் தீர்த்திருக்க முடியும். எனவே, மக்கள் பிரதிநிதிகள் ஊடாக இப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீவிரமாக முன்வைக்கவும், அரசியலமைப்பு ரீதியாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.