மிரிஸ்ஸ கடற்கரையில் போதைப்பொருள் பொதிகள் மீட்பு ; பெண் ஒருவர் கைது
மாத்தறை – மிரிஸ்ஸ, தல்அரம்ப கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (28) முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின்போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதிகள் படகொன்றிலிருந்து இரண்டு வாகனங்களுக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டதுடன், பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றும் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.