யாழ். பல்கலைக்கழக இரு பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு!
யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் J.P. ஜெயதேவன் சிரேஷ்ட பேராசிரியராகவும், கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் பேராசிரியராகவும் உயர்வு பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை சேர்ந்த கல்வியாளர்கள் இருவருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் J.P. ஜெயதேவன், இரசாயனவியலில் சிரேஷ்ட பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அதே வேளை, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவ துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆறுமுகம் சரவணபவன், மனிதவள முகாமைத்துவத்தில் பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (நவம்பர் 28) துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை விதிமுறைகளுக்கு அமைவாக, திறமை அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மதிப்பீடு மற்றும் நேர்முக தேர்வு முடிவுகள் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, இரு கல்வியாளர்களுக்குமான பதவி உயர்வுகளுக்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வு பணிகளுக்கு பங்களித்து வரும் இரு கல்வியாளர்களுக்கும் இப்பதவி உயர்வுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.