யாழ்ப்பாணம் நயினாதீவில் மர்ம தாவரங்கள்!
யாழ்ப்பாணம் நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் எனத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தாவரத்தின் சாதக, பாதகங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதக, பாதகங்கள் தொடர்பாக அறிக்கை
அறிக்கையின்படி, இத்தாவரத்தின் சிறிய விதைகள் காற்று, நீர் மற்றும் விலங்குகள் ஊடாக இலகுவாகப் பரவக்கூடியவை.
குறிப்பாக, விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத கைவிடப்பட்ட நிலங்களில் அடர்த்தியான புதர்களாக வளர்ந்து, விவசாய நிலங்களையும் ஏனைய தாவரங்கள் வளரும் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இத்தாவரம் மண் அரிப்பைக் குறைத்தல், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல் மற்றும் ஆழமான மண் அடுக்குகளிலிருந்து ஊட்டச்சத்துகளை மேல் மண்ணுக்குக் கொண்டுவருதல் போன்ற நன்மைகளையும் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இத்தாவரத்தின் மண்வள மேம்பாட்டுப் பண்புகளை விவசாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், அதன் கட்டுப்பாடற்ற பரவலைத் தடுப்பதற்கும் முறையான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தியுள்ளது.