எனது சாரதி இப்போது பல வாகனங்களுக்கு சொந்தக்காரர் ; மார்தட்டும் மைத்திரியின் சகோதரர்
எனது சாரதி இப்போது பல வாகனங்களுக்கு சொந்தக்காரர் என இலங்கையின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன வெளிப்படுத்தியுள்ள விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

பல வாகனங்களின் உரிமையாளர்
நட்பு, தமக்கு கீழ் வேலை செய்பவரை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பல்வேறு படிப்பினைகளை கூறும் ஒரு கதையே இது; ”இங்கே இருப்பது என்னுடைய முதல் சாரதி.
இதற்கு முன்னர் நான் கொழும்பு-குருணாகல் வீதியில் பேருந்து ஒன்றை வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். அது என்னுடைய ஆரம்ப கால முயற்சிகளுள் ஒன்று. அந்தப் பேருந்தின் நடத்துனராக திஸ்ஸவே இருந்தார்.
அதன் ஓட்டுநர் நான்தான். பின்னர், நான் ஒரு பாரவூர்தியை வாங்கி, எனது தொழிலை இன்னும் விரிவுபடுத்தியபோது, திஸ்ஸ அந்தப் பேருந்தின் ஓட்டுநரானார். அப்படியாக ஆரம்பிக்கப்பட்ட எனது வணிகப் பயணத்தில், நான் வாங்கிய முதல் ஜீப் இதுதான். இந்த புகைப்படங்களில் இருப்பது அதுதான்.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் மெதுவாக அரிசி வணிகத்தில் இறங்கியபோது, திஸ்ஸவே என்னுடைய மகன் திமித்ரவின் சாரதியாக இருந்தார். எனது வாழ்க்கையில் திஸ்ஸ எவ்வளவு பெறுமதியானவர் என்று சொன்னால், எனது மிகப்பெரிய அரிசி ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதல் மண்வெட்டியை எடுத்த மனிதர் அவர்தான்.
இன்றும் என்னுடைய மகன் திமித்ர இளைஞன். நானும் திஸ்ஸவும் எனது முதல் ஜீப்பும் மெதுவாக வயதாகிக் கொண்டிருக்கிறோம். அன்று என்னுடன் பாரவூர்திகளில் சென்ற, கைகளில் கொப்பளங்கள் வரும்வரை பேருந்துகளில் சென்ற திஸ்ஸவும் இன்று பல வாகனங்களின் உரிமையாளர். ஆனாலும் திஸ்ஸ இன்னும் என்னிடமிருந்து விலகிச் செல்லவில்லை.
இன்று திஸ்ஸ எனது பாரவூர்திகளுக்குப் பதிலாக பென்ஸ், பிஎம்டபிள்யூ , லெக்ஸஸ் ஓட்டுகிறார். ஆனாலும் எங்கள் நட்பு, பாசம் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. அதனால், எது நடந்தாலும் ஆரம்பத்தை மறந்துவிடாதீர்கள்.
தொழில் மட்டுமல்ல, எதை ஆரம்பித்தாலும், அது வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. ஏனென்றால், அவர்களின் ஆசீர்வாதம் நமது பயணத்திற்கு மிகவும் பெறுமதியானது என குறிப்பிட்டுள்ளார்.