தமிழர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்துக்கொண்ட முஸ்லிம்கள்!
அம்பாறையில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து தமது ஆதரவை தெரித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் 7 ஆவது நாளான இன்று (11) பொலிகண்டி வரையிலான பேரணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவருமான தாமோதரம் பிரதீபன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம், பொன் செல்வநாயகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன், ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவி கந்தையா கலைவாணி , உள்ளிட்ட பலர் அரசியலை கடந்து கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சுழற்சி முறையிலான இப்போராட்டத்தை பல்வேறு தடைகளை உடைத்து முன்னெடுத்து வருகிறோம், அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.
அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை (ICC) கோரியே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் முஸ்லீம் மக்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.