பெர வாத்திய கலைஞர் கொலை ; சந்தேகநபர் வழங்கிய பகீர் வாக்குமூலம்
கொழும்பு கெஸ்பேவை பகுதியில் துஷ்மந்த சந்தருவன் என்ற 30 வயதுடைய திருமணமான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாயான மஞ்சு என்பவர் வழங்கிய வாக்குமூலத்திலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
துஷ்மந்த தனது மனைவியுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதைத் தான் அறிந்திருந்தமையால் இக்கொலையைச் செய்ததாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, கண்டி முருதலாவ பகுதியைச் சேர்ந்தவரும், தொழிலால் பெர வாத்தியம் மற்றும் நடனக் கலைஞருமான துஷ்மந்த, கடந்த நவம்பர் 22ஆம் திகதி பிற்பகல் கெஸ்பேவ பகுதியில் உள்ள மஞ்சு என்ற நண்பரின் அழைப்பின் பேரில் சமய நிகழ்வொன்றில் பெர வாத்தியம் வாசிக்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மறுநாளும் தனது கணவரிடமிருந்து எவ்விதத் தகவலும் கிடைக்காததால், அவரது மனைவி கடந்த 23ஆம் திகதி பிற்பகல் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்பின்னர் கெஸ்பேவை பகுதிக்குச் சென்று தனது கணவரின் நண்பரான மஞ்சுவைச் சந்தித்து கணவர் குறித்து வினவியபோது, துஷ்மந்த அங்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, கடந்த 26ஆம் திகதி அவர் கெஸ்பேவை பொலிஸ் நிலையத்திலும் தனது கணவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய மஞ்சு என்பவரும் மற்றும் சில நபர்களும் கெஸ்பேவை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட போதிலும், துஷ்மந்த தொடர்பில் எவ்விதத் தடயமும் கிடைத்திருக்கவில்லை.
இதற்கிடையில், துஷ்மந்தவின் மனைவிக்கு இனந்தெரியாத தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளதுடன், 120,000 ரூபா பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டால் துஷ்மந்தவை விடுவிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், துஷ்மந்த காணாமல் போய் 6 நாட்களின் பின்னர் நேற்று (28) இரவு கெஸ்பேவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் கமகேவின் பிரத்தியேக தகவலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தகவலொன்றை வழங்கியிருந்தார்.
காணாமல் போயுள்ள துஷ்மந்த, மஞ்சு என்பவராலும் அவரது நண்பர்கள் குழுவொன்றினாலும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவலாளி அங்கு தெரிவித்திருந்தார்.
இதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட கெஸ்பேவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், துஷ்மந்த தனது மோட்டார் சைக்கிளில் மஞ்சுவின் வீட்டை நோக்கிச் செல்லும் சிசிரிவி (CCTV) காணொளிகளைக் கண்டறிந்தனர்.
இதன்போது பொலிஸார் முன்னாள் இராணுவச் சிப்பாயான மஞ்சு என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் இருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பிரதான சந்தேகநபரான மஞ்சு வெளியிட்ட தகவலில், துஷ்மந்த தனது மனைவியுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதைத் தான் அறிந்திருந்ததாகவும், தனது வீட்டிற்கு வந்த துஷ்மந்தவை ஹெரலியாவல பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அங்கு நான்கு நண்பர்களுடன் இணைந்து துஷ்மந்தவை விகாரையின் பின்புற அறையொன்றிற்கு அழைத்துச் சென்று தாக்கிக் கொலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுதம் ஒன்றின் உதவியுடன் எலும்புகளை முறித்து உடலைப் பையொன்றில் இட்டு, கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள சதுப்பு நிலத்திற்குக் கொண்டு சென்று புதைத்ததாகவும், மோட்டார் சைக்கிள் மற்றும் துஷ்மந்தவின் பயணப் பை ஆகியவற்றை மறைத்து வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (29) பிற்பகல் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் களுபோவில போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று பிற்பகல் கெஸ்பேவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, கொலை இடம்பெறும் விதத்தைச் சந்தேகநபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து பின்னர் அழித்துள்ள நிலையில், குறித்த கையடக்கத் தொலைபேசி அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கெஸ்பேவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் கமகே குறிப்பிடுகையில், கப்பம் கோரி உயிரிழந்த நபரின் மனைவிக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.