தமிழ் தாய்மார்களின் துயரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தாதீர்கள் ; அலி சப்ரி வலியுறுத்தல்
வடக்கிலுள்ள தமிழ் தாய்மார்கள் தமது இழந்த பிள்ளைகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றுவதற்கு உரிமையுள்ளவர்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்தத் தாய்மார்கள் தமது பிள்ளைகளை நினைவுகூரும் வகையில் விளக்கேற்றும்போது, அதற்கு இடமளிக்க வேண்டும் என்றும், அவர்களின் தனிப்பட்ட துயரத்தை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அலி சப்ரி, "வடக்கிலுள்ள தமிழ் தாயொருவருக்குத் தான் இழந்த பிள்ளையை நினைவுகூர்ந்து விளக்கேற்றுவதற்கு உரிமை இருக்கின்றது.
அந்த விளக்கிற்கு அருகில் நின்று அவர் தனது பிள்ளையை நினைவுகூர இடமளியுங்கள். உங்களது அரசியல் இலாபத்திற்காக அந்தத் தாயின் துயரத்தை மேடைக்குக் கொண்டு வராதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது பிள்ளைகளை இழந்த வடக்கு தமிழ் தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்களின் துயரத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் இலாபங்களுக்காகவும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.