அரச வங்கியில் பல மில்லியன் கொள்ளை ; லக்கி பாஸ்கர் பட பாணியில் சம்பவம் ; முகாமையாளரின் குட்டு அம்பலம்
ஹொரனை பகுதியில் உள்ள முன்னணி அரச வங்கி ஒன்றில் மூன்றரை கோடி ரூபாய் பணம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிதி கொள்ளைச் சம்பவம், வங்கியின் பிரதி முகாமையாளரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி என்பது பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபரான பிரதி முகாமையாளர் நேற்று (07) சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் இந்தத் மோசடியை எவ்வாறு செய்தார் என்பது குறித்துப் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெளி வியாபாரங்களிலும் முதலீடு
சந்தேகநபரான பிரதி முகாமையாளர் பல்வேறு பெண்களிடம் தனிப்பட்ட முறையில் வட்டி அடிப்படையில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளார். அப்பணத்திற்கான மாதாந்த வட்டித் தொகையைச் செலுத்துவதற்காகவே அவர் வங்கியில் இவ்வாறு முறைகேடுகளைச் செய்துள்ளார்.
அத்துடன், அவ்வாறு வங்கியிலிருந்து மோசடி செய்த பணத்தைச் சுரங்கத் தொழில் போன்ற பல்வேறு வெளி வியாபாரங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
குறித்த அரச வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை வைப்புச் செய்யும் பிரதான பொறுப்பு இந்தச் சந்தேகநபரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய அவர், வங்கி நிர்வாகம் நிர்ணயிக்கும் தொகையை விடக் குறைவான பணத்தையே இயந்திரங்களுக்குள் செலுத்திவிட்டு, எஞ்சிய கோடிக்கணக்கான பணத்தை நீண்ட காலமாகத் தனியாகக் கையாடல் செய்து வந்துள்ளார்.
இவ்வங்கியில் நீண்ட காலமாகப் பௌதீக ரீதியிலான நிதித் தணிக்கை எதுவும் நடத்தப்படாததால், இந்த மாபெரும் மோசடி இவ்வளவு காலம் மறைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருக்குப் பலருடன் இருந்த நெருங்கிய தொடர்புகள் காரணமாக, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர் வெளியில் பல நபர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் சட்டவிரோத தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி வங்கியின் வெளிப்பகுதியிலிருந்து வந்த நபர் ஒருவர் பணப் பைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாடு முற்றிலும் பொய்யானது எனவும், தங்களின் மோசடியை மூடிமறைப்பதற்காகப் பிரதி முகாமையாளரும் பாதுகாப்பு அதிகாரியும் இணைந்து இக்கதையைத் திட்டமிட்டு கூறியுள்ளனர் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேல் மாகாண வட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நேரடி மேற்பார்வையில், மறைக்கப்பட்ட எஞ்சிய பணத்தை மீட்பதற்கான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.