தமிழர் பகுதியில் இளைஞரின் உயிரைப் பறித்த கோர விபத்து ; சகோதரிக்கு நேர்ந்த கதி
வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர், ஏ9 பிரதான வீதியின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதிக்கு அருகில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அந்த வேளையில், மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.