சுரேஷ் சலேக்காக கொழும்பில் போராட்டம்; புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளியோம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு கோரியதுடன், அவரது கைது மற்றும் தடுப்புக் காவலை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

முள்ளிவாய்க்கால் பழிவாங்கலா.....
இதன்போது , புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். சுரேஷ் சலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, முள்ளிவாய்க்கால் பழிவாங்களை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை. சுரேஸ் சலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
போராட்டத்தில் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில உட்பட அரசியல் தரப்பினர்கள் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெங்கமுவே நாலக தேரர், நாட்டுக்காக சேவையாற்றிய சுரேஷ் சலேவை சிறையில் அடைத்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்தும் கருத்து வெளியிட்டார்.
