அவசர கடிதம் ஒன்றை சுற்றுலாத்துறை அமைச்சருக்கு அனுப்பிய எம்.பி!
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் (Selvam Adaikalanathan) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரை களியாட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் எதற்காக கருவாடு உலர்த்த வேண்டும் என்று கூறப்பட்ட விடயம் தொடர்பாக அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டம் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார பின்னணியினை கொண்ட மாவட்டமாகும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு செலாவணியை உள்வாங்குவதற்காக தவறான வழியை தேர்ந்தெடுப்பது சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.
மன்னார் மாவட்ட மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இந்த இரண்டில் இருந்தும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கின்றனர்.
இந்த மக்களின் முக்கிய வருமான ஆதாரங்கள் இவை. எனவே இந்த தொழில்களை குறைத்து மதிப்பிட முடியாது.
மீன் மற்றும் உலர் மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். உலர் மீன் தயாரிப்பது குறைத்து மதிப்பிட வேண்டிய தொழில் அல்ல.
எனவே நீங்கள் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொருந்தாததுமாகும் என மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.