VAT வரி திட்டத்தை இரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இறப்பர் வர்த்தகர் குழு எச்சரிக்கை
எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை இரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் கடுமையான மற்றும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை இறப்பர் வர்த்தகர் குழு தெரிவித்துள்ளது.
எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், செயற்பாட்டு நிதியை மீளப்பெறும் வழிமுறை இன்றி எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் இயற்கை இறப்பர் தொழிற்துறை பரவலான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளுமென குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சிறு தொழில் உரிமையாளர்களின் வாழ்வாதாரம், ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணியை அச்சுறுத்தும் என இலங்கை இறப்பர் வர்த்தகர் குழு தெரிவித்துள்ளது.