வவுனியாவில் அதிக சத்தமுடன் பயணித்த மோட்டார் சைக்கிள்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்
அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்களை வவுனியா பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
வவுனியா வீதிகளில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைய பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டார் சைக்கிள்களை இளைஞர்கள் செலுத்தி வருகின்றனர்.
இதனால் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அப் பகுதியில் வசிப்போர், மாணவர்கள் போன்றோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் வவுனியா மாநகர சபையால் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதனையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.