தமிழர் பகுதியில் இறந்தும் இருவரை வாழ வைத்த தாய் ; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த உறுப்பு தானத்தின் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

தவறி விழுந்து விபத்து
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தாய், கடந்த 15ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்துக்குள்ளானார்.
அந்த விபத்தின்போது தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக தீவிர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைகளும் பலனளிக்காத நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன், அவரது இரண்டு சிறுநீரகங்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து தானமாக அளிக்கப்பட்டன.
இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 நோயாளிகளுக்கும் அந்தத் தாயின் சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு, மறுவாழ்வுக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஒரு குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்து, மற்றொரு புறத்தில் இரண்டு உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.