மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சிசு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயும், சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த தரப்பினர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயும், சிசுவும் உயிரிழந்த சம்பவம் குறித்து, தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (21-11-2024) வடமாகாண சுகாதார அமைச்சின் ஒழுக்காற்று விசாரணைக் குழு ஒன்று மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, அந்த குழு எதிர்வரும் திங்கட்கிழமையும் மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபடுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார்.
மேலும், சுகாதார அமைச்சின் 2 குழுக்களும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
குறித்த குழுக்களின் விசாரணை அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.