ஏவுகணை சோதனைக்காக 11,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
ஒடிசாவின் சந்திப்பூர் நகரில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நடத்தவிருந்த ஏவுகணை சோதனைக்காக, ஏவுதளத்தைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவில் வசித்த 11,442 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் பர்தான்பூர், பீம்பூர் மற்றும் துந்த்ரா ஆகிய கிராமங்களில் உள்ள புயல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும், ஈடுசெய்யும் விதமாக அனைவருக்கும் ஒரு நாளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்பு நலன் கருதி ஏவுகணை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புத் துறையுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கையாக பாலசோர், பத்ரக் மற்றும் கேந்திரபரா கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோதனை முடிந்த பின்னர் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.