10 அமைச்சுக்களுக்காக 10 இற்கும் மேற்பட்டோர் போட்டி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்காக 10 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசமைப்பின்படி 30 கெபினட் அமைச்சர்களையே நியமிக்க முடியும். அந்தவகையில், இன்னும் எஞ்சி இருப்பது 10 அமைச்சுக்கள் மாத்திரமே. அந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
மொட்டுக் கட்சியில் இருந்து ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
அவர்களுள் அத்தனை பேருக்கும் பதவிகள் கிடைப்பது நிச்சயமில்லை. மறுபுறம், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் வரிசையில் நிற்கின்றனர்.
சுகாதார அமைச்சுப் பதவி தந்தால் தான் அரசுடன் இணைவேன் என்று கூறியுள்ளார் ராஜித. தற்போது சுகாதார அமைச்சராக இருக்கும் கெஹலிய ரம்புக்வெல அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்று தெரியவருகின்றது.
இந்தநிலையில் இரண்டு தரப்பிலும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் 10 பதவிகளுக்குப் போட்டியிடுவதால் போட்டி கடுமையாகவுள்ளது.