மின் கட்டண விவகாரத்தில் தவறான புரிதல்கள் ; நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்
மின் கட்டணத்தை முடிந்தளவு குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இலங்கை மின்சாரசபையின் யோசனைகளை மீளாய்வு செய்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (6) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முடிந்தளவு மின் கட்டணத்தை குறைந்த மட்டத்தில் பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எவ்வாறிருப்பினும் இலங்கை மின்சாரசபையால் சில காரணிகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
அவற்றை மீளாய்வு செய்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உரிய தீர்மானம் எடுக்கும்.
மின் கட்டணம் அதிகரிக்கப்படும் போது இலங்கை மின்சாரசபை அரசாங்கத்துடையது என்றும், கட்டணம் குறைக்கப்படும் போது அது சுயாதீனமானது என்றும் சிலர் கருதுகின்றனர்.
இது பொறுத்தமற்றதொரு நிலைப்பாடாகும். இலங்கை மின்சாரசபையானது தம்மிடமுள்ள தரவுகளின் அடிப்படையில் யோசனைகனை முன்வைக்கும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவற்றை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தையே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.