களவுபோன வெளிநாட்டு பெண்ணின் பயணப் பொதி மீட்பு
நாட்டுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி பேருந்தில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணப் பொதி திருடிய சந்தேக நபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி
சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் பயணப்பொதியில் திருடப்பட்ட கமராவை தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனலை நடத்தி வரும் இங்கிலாந்து பெண்ணான ஸ்கை மெக்கோவன் என்பவர் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் பஸ்ஸில் வைத்து இவரது பயணிப்பைத் திருடு போனதாக பொலிஸில் முறைப்பாடு வழங்கி இருந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.