பசிலின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட தகவல்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ (Rajapaksa Rajapaksa), இரட்டைக் குடியுரிமையைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லை என மொட்டு கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்ததாலேயே 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை. நான் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் ஆதரவாக வாக்களித்திருப்பேன்.
ஏனெனில் 19 ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் வர வேண்டும் என எமது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) வலியுறுத்தியிருந்தார்.
இரட்டை குடியுரிமை தடையால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 22 ஆவது திருத்தச்சட்டமூலம் வரும்போது அது தொடர்பில் பசில் ராஜபக்ஷவிடம் கலந்துரையாடினேன்.
இதன்போது, இரட்டை குடியுரிமையை கைவிடும் முடிவை நான் தற்போதே எடுக்கப்போவதில்லை, எனவே, 22 குறித்து நீங்கள் முடிவை எடுங்கள். இது விடயத்தில் என்னை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை இருந்தபோதுதான் முக்கிய தேர்தல்களை பசில் ராஜபக்ஷ வழிநடத்தினார். தற்போது வழிநடத்துகின்றார்.
மக்கள் போராட்டத்தை சிலர் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டனர். எமது தரப்பிலும் சில தவறுகள் இருந்திருக்கலாம். அவற்றை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்வோம். – என்றார்.