இலங்கையில் இராணுவ ஆட்சியா? பாதுகாப்பு செயலாளரின் அறிவிப்பு!
இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் இடம்பெறவில்லை என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன , அதற்கான சாத்தியமும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் 136 வீடுகள், சொத்துகள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்கள் உட்பட 41 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. 60 வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
219 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கலவரத்தில் சொத்து இழப்புகளின் பெறுமதி தொடர்பில் இன்னும் கணக்கிடப்படவில்லை.
முப்படையினருக்கு உத்தரவிட எனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால் அதிகாரம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால்தான் உத்தரவிட்டேன் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் கொழும்பில் கூட்டத்துக்கு வந்தவர்கள் கோல்பேஸ் செல்வார்கள் என புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்த ககமல் குணரத்ன , அது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் ஊரடங்கு சட்டத்தை நாளை நீக்கமுடியும் என நம்புகின்றோம் என தெரிவித்த அவர், இலங்கையில் இராணுவ ஆட்சி இடம்பெற்றதில்லை. ஒருமுறை அதற்கான முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. எனவே, இராணுவ ஆட்சி இடம்பெறாது. அதற்கான சாத்தியமும் இல்லை எனவும் கூறினார்.