மைக்ரோ பிளாஸ்டிக் சுகாதார அச்சுறுத்தல் ; வெசாக் முன்னிட்டு அதிகாரிகள் எச்சரிக்கை
எதிர்வரும் வெசாக் காலத்தில் அலங்காரப் பணிகள் மற்றும் தானம் வழங்கும் நடவடிக்கைகளின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களுக்கு விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட முழுச் சூழலமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள் , குடிநீர் குவளைகள் , தட்டுகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள்,பொலிஸ்டைரின் (Regiform) உணவுப் பெட்டிகள் மற்றும் பொலித்தீன் உணவுத் தாள்கள் (Lunch sheets). பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் அனைத்து வகையான பாலிஎதிலீன் அல்லது பாலிப்ரோப்பிலீன் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதும், காட்சிப்படுத்துவதும் அல்லது பயன்படுத்துவதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மதம் அல்லது கலாசார நிகழ்வுகளின் போது இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர், முறையாக அகற்றப்படாத கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்துவதுடன், இவற்றை உட்கொள்ளும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
நுண் பிளாஸ்டிக் (Microplastics) மனித உடலுக்குள் செல்வதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பிளாஸ்டிக் கழிவுகளைத் திறந்தவெளியில் எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலக்கின்றன.
எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றாடல் நட்பு ரீதியிலான மாற்றீடுகளைப் பயன்படுத்துமாறும், மக்காத கழிவுகளை முறையாக நிர்வகிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.