இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக கடற்கரையை அடையும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வடமாகாணத்தில் சில இடங்களில் 75 மில்ல மீற்றர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புத்தளத்தில் இருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாககாணப்படும் எனவும் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அனர்த்தங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஏதேனும் அனர்த்த நிலைமைகள் பதிவாகுமாயின், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.