மன்னார் மக்களுக்கு கைவிரித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன!
மன்னாரில் நீண்ட காலமாக CT ஸ்கேன் வசதிகள் இல்லாமையால் நோயாளர்கள், பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஸ்கேன் மேற்கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து வரையான நோயாளர்கள் வவுனியா அல்லது யாழ்பாணத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மன்னார் வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளடங்களான குழுவினரிடம் வைத்தியசாலை பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்திய சாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கூட்டாக CT ஸ்கேன் வசதிகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டதாகவும் வருகின்ற வருட பாஜெட்டில் குறித்த CT ஸ்கேனை பெற்று தருவதாகவும் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
தொடர்சியாக ஒவ்வொரு முறையும் CT ஸ்கேன் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்கத்திடமும், அமைச்சர்களிடமும் அதே நேரம் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்சியாக மன்னார் மக்களின் கோரிக்கை கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.