தெருவில் பிச்சைக்காரர்... பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி ; அதிகாரிகள் ஷாக்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான "பிச்சைக்காரர்" ஒருவர் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர் வீதிகளில் பிச்சை எடுப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு ரிக்சா வண்டி ஒன்றில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த "மங்கிலால்" (Mangilal) என்ற மாற்றுத்திறனாளியை மீட்டனர்.

அதிர்ச்சியில் அதிகாரிகள்- மூன்று அடுக்கு மாடி வீடு
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த உண்மைகள் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அதாவது, மங்கிலாலுக்கு பகத்சிங் நகரில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்றும், சிவ் நகரில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட மற்றொரு வீடும் சொந்தமாக உள்ளன.
அதுமட்டுமல்லாது , மங்கிலால் ஒரு Swift Dzire சிற்றூந்தை சொந்தமாக வைத்துள்ளார். இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தச் சிற்றூந்தை ஓட்டுவதற்கு அவர் மாதாந்த வேதனத்திற்கு ஒரு ஓட்டுநரையும் பணியமர்த்தியுள்ளார்.
பிச்சை எடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு (இந்திய மதிப்பில்) 500 முதல் 1000 ரூபாய் வரை ஈட்டும் இவர், அந்தப் பணத்தைக் கொண்டு அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.
இதற்காக வாராந்திர மற்றும் தினசரி வட்டியை வசூலித்து வந்துள்ளார். ஏற்கனவே பல வீடுகள் இருந்தும், தனது உடல் ஊனத்தைக் காட்டி "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் கீழ் மற்றொரு வீட்டையும் பெற்றுள்ளார். மேலும் மூன்று முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறார்.
இந்நிலையில், தகுதியற்ற ஒருவருக்கு எவ்வாறு அரசுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டது என்பது குறித்தும், அவரது சட்டவிரோத வருமானம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , அவர் குறித்த தகவல்கள் பேசுபொருளாகியுள்ளது.