முந்திரி தோட்டத்திற்குள் நுழைந்தவர் துப்பாக்கிச்சூட்டில் பலி ; பொலிஸாரின் பிடியில் பலர்
புத்தளம், கரைத்தீவில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் இடம்பெற்ற வாயுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாரெனவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய எட்டுப் பேரைக் கைது செய்துள்ளதாகவும் வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரைத்தீவுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

எட்டுச் சந்தேகநபர்கள் கைது
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கரைத்தீவுப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரித் தோட்டமானது, கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காகக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த முந்திரித் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகக் குத்தகையாளர் தனிப்பட்ட பாதுகாப்புக் காவலர்களை நியமித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை குறித்த முந்திரித் தோட்டத்திற்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த பாதுகாப்புக் காவலர் ஒருவர் வாயுத் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சூட்டுச் சம்பவத்தில் கடுமையான காயமடைந்த குறித்த நபர், உடனடியாகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனாத்தவில்லு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.