பாதயாத்திரீகர்களுடன் பயணித்த நாயை உதைத்த நபர் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் சென்ற ‘சுப்பிரமணியன்’ எனும் நாயை, உதைத்துத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன கடந்த சனிக்கிழமை (27), அன்று வீதியில் சென்ற நாயை 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உதைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மனிதாபிமானமற்ற செயல்
இதனையடுத்து, பல தரப்பினரின் கண்டனங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கமைய, கல்முனை தலைமையகப் பொலிஸார் குறித்த சந்தேக நபரை அன்றைய தினமே கைது செய்தனர்.
இந்த வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். அத்துடன், வழக்கினை ஜூலை மாதம் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பாதிக்கப்பட்ட இந்த நாய், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் குழுவினருடன் பயணிக்கும் 'சுப்பிரமணியன்' எனும் பெயருடைய நாயாகும்.
சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்து வந்த நாயைத் தாக்கியது மனிதாபிமானமற்ற செயல் என பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் இச்சம்பவம் வைரலானதை அடுத்து, பலர் இச்செயலுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னரே, சந்தேக நபர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறித்த நாயைத் தாக்கியமைக்காக மன்னிப்பு கோரி பதிவிட்டிருந்தார்.