யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; பேராசிரியரின் முறைப்பாட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுச் சபை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த உத்தரவு, கடந்த ஜூன் 30ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஆர். கபிலன், 2022ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கையாகக் கருதிய அப்போதைய பல்கலைக்கழகப் பேரவை, அவரை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.
இந்த நீக்கத் தீர்மானம் சட்டவிரோதமானது எனக் கூறிய பேராசிரியர் ஆர். கபிலன், தம்மை 2022 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தாவரவியல் துறைத் தலைவராக நியமிக்குமாறு கோரி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும், முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்மானிக்கும் அதிகார வரம்பு மேன்முறையீட்டுச் சபைக்கு இல்லை என்று ஜூரிகள் சுட்டிக்காட்டியதுடன், அந்த அடிப்படையில் மேன்முறையீட்டு முறைப்பாட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே, இதே விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பேராசிரியர் ஆர். கபிலன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகளையும் கடந்த ஆண்டு அவர் திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.