கோர விபத்தில் உயிரிழந்த காதலி ; காதலியின் மரணச் செய்தியால் விபரீத முடிவுக்கு முயன்ற இளைஞர்
பாடசாலைப் பருவத்திலிருந்து காதலித்து வந்த இளம் ஜோடி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இடம்பெற்ற விபத்தில், 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காதலியின் உயிரிழப்புச் செய்தியை அறிந்த இளைஞர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ரத்தினபுரி கத்தஹட்ட, போபத்தையைச் சேர்ந்த ஹன்சனி செவ்வந்தி என்ற 26 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞர் எஹெலியகொட, விலேகொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை (07) மாலை சுமார் 5.30 மணியளவில், ரத்தினபுரி எஹெலியகொடவிலிருந்து பரகடுவ நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மஹிங்கொட துவ பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதிவேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி உடனடியாக எஹெலியகொட ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யுவதி தலைக்கவசம் அணியாதிருந்தமையும் அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது காதலியின் உயிரிழப்புச் செய்தியை அறிந்த இளைஞர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பிய பின்னர் விஷம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து, ஆபத்தான நிலையில் எஹெலியகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.