யாழில் எலி எச்சத்துடன் சவ்வரிசி விற்றவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் எலி எச்சங்களுடன் கூடிய சவ்வரிசி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் 36,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில் பகுதியில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, அங்குள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதன்போது, எலி எச்சங்களுடன் கூடிய சவ்வரிசி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் இணுவில் பொது சுகாதாரப் பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் முன்னிலையான வர்த்தகர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, வர்த்தகரைக் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் அவருக்கு 36,000 ரூபாய் அபராதம் விதித்தது.