அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; தமிழர் பகுதி பொலிஸார் விசேட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்புடைய அவதூறான சமூக வலைத்தளப் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்களைத் தவிர்க்குமாறு கல்முனை தலைமையகப் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிலரால் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் வெளியிடப்படும் கருத்துகள் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுதல், விஷமத்தனமான பதிவுகளைப் பகிர்தல் மற்றும் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்தாடல்களில் ஈடுபடுதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.