மத்திய கிழக்கிலிருந்து வந்த குழுவால் அதிர்ந்த விமான நிலையம் ; உடனிருந்தவர்கள் தப்பியோட்டம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடியே 86 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து வந்த பயணிகள் குழுவொன்று, பெருந்தொகையான சிகரெட்டுகளை கடத்த முயன்றுள்ளனர்.

தப்பியோட்டம்
கொழும்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர், தனது பயணப் பொதிகளில் சிகரெட்டுகளை மறைத்து வைத்து Green Channel ஊடாக வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டார்.
இதனைக் கண்ட அவருடன் வந்த ஏனைய பயணிகள், தங்களது 14 பயணப் பொதிகளை விமான நிலைய வருகை முனையத்திலேயே கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EM-654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.
சந்தேக நபர்களால் கொண்டுவரப்பட்ட 16 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 113 இலத்திரனியல் சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தப்பியோடிய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறியவும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.