திருமணத்துக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியைக் கொன்ற இளைஞர் கைது
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே தனது திருமணத்துக்குத் தொடர்ந்து இடையூறாக இருந்த கள்ளக்காதலியை பீர் போத்தல் மற்றும் கற்களால் தாக்கிப் படுகொலை செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவிலுள்ள நானடி கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஐராவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததுடன், சிக்கோடியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இதன்போது, பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சஞ்சய் என்பவருடன் ஐராவதிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சஞ்சய்க்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், இதற்கு ஐராவதி எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஏற்கனவே இரண்டு முறை சஞ்சய்க்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையும் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மூன்றாவது முறையாக வேறொரு பெண்ணுடன் சஞ்சய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதனையும் தடுத்து நிறுத்த ஐராவதி முயற்சித்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த 20ஆம் திகதி ஐராவதியை தோரணகல்லுவிலுள்ள மலைக்கோவிலுக்கு சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த பீர் போத்தல் மற்றும் அங்கிருந்த கற்களால் ஐராவதியை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஐராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது சடலத்தை அருகிலுள்ள வனப்பகுதியில் வீசிவிட்டுச் சஞ்சய் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், வேலைக்குச் சென்ற ஐராவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சிக்கோடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஐராவதியின் கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளை ஆய்வு செய்தபோது, அவர் இறுதியாகச் சஞ்சயுடன் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சஞ்சயைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, திருமணத்துக்கு இடையூறாக இருந்ததால் ஐராவதியைக் கொலை செய்து சடலத்தை வனப்பகுதியில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வனப்பகுதியில் இருந்து ஐராவதியின் சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.