உணவு உண்ட பின் மறந்தும் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்
உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதுவும் உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சொல்லப்போனால் இப்படியான பழக்கங்கள் செரிமானத்தை சீராக்குவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தான் சீர்குலைக்கும். இப்போது உணவு உண்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள் குறித்து காண்போம்.

உணவு உண்டதும் காபி/டீ குடிப்பது
நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டதும் காபி/டீயைக் குடித்தால், அது செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. அதுமட்டுமின்றி, இப்படி காபி/டீயை குடிக்கும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்கு பின் காபி/டீ குடிக்க நினைத்தால், குறைந்தது 1 மணிநேரம் கழித்து அருந்துங்கள்.
சாப்பிட்டதும் பழங்களை உண்பது
உணவு உண்ட பின் சிலருக்கு பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். என்ன தான் பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் அது நொதித்தலை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உங்களுக்கு பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ, வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது.
சாப்பிட்ட உடனே தூங்குவது
அல்லது படுப்பது உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.
அதிகளவு நீரை அருந்துவது
தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான். ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரை குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப் போக செய்து, உணவை செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க நினைத்தால், 30 நிமிடம் கழித்து குடிப்பது நல்லது.
உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியை செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்கு பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாமே தவிர, தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதாக இருந்தால், குறைந்து 1 மணிநேரம் கழித்து செய்யலாம்.