முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருக்கமான பதிவு ; காவந்திஸ்ஸவுக்கு இறுதி அஞ்சலி
உயிரிழந்த இலங்கையின் பிரபலமான யானையான ‘காவந்திஸ்ஸ’வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்தில் யானைகள் வகிக்கும் தனித்துவமான இடத்தை நினைவு கூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, “மாபெரும் வனத்தின் மன்னனான துவிரத கஜ காவந்திஸ்ஸவை, வனமே கடைசியாகத் தழுவியது என்று நான் நம்புகிறேன்” எனத் தனது பதிவை ஆரம்பித்துள்ளார்.

இறுதி அஞ்சலி
நம் நாட்டின் வரலாற்றில் யானைகள் இடம்பெறாத இடமே இல்லை என்றும், இந்த மாபெரும் உயிரினத்தை மகாவம்சத்தின் பக்கங்களில் காணலாம் என்றும், ஊர்வலம், முடிசூட்டு விழாக்கள் மற்றும் போர்க்களங்களின் போது யானைகள் இல்லாத இடமே இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாட்சியின் அடையாளமாக விளங்கிய யானைகள், வரலாற்றில் மன்னர்களுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தில் யானைகளுக்கு உள்ள இடத்தையும் நினைவுகூர்ந்த அவர், இலங்கையின் கலாசாரம், மதம், கலை மற்றும் நாட்டுப்புற வாழ்வுடன் யானைகள் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
பெருமை, வலிமை, பொறுமை மற்றும் கருணையின் அடையாளமாக விளங்கும் யானைகளைப் பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, யானை மன்னன் ‘காவந்திஸ்ஸ’வுக்கு தனது இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.